தென்னிந்தியாவின் பெரும் சாம்ராஜ்ஜியமாக நிலைகொண்டிருந்த சோழச் சாம்ராஜ்ஜியத்தின் மாமன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழனை வென்று ( கி.பி. 1279) பாண்டியப் பேரரசை நிறுவினான் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். இவ்வெற்றியின் மூலம் சோழப்பேரரசு மறைந்து, இரண்டாம் பாண்டியப் பேரரசு உதயமானது. அவனுக்குப் பின் அவனது மகன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் அமர்ந்தான். அவனது காலத்தில் பாண்டிய நாடு புகழின் உச்சியை அடைந்தது. சோழமண்டலம், கொங்கு தேசம், தொண்டை நாடு, கொல்லம், நெல்லூர், இலங்கை வரையிலான பகுதி அவனது ஆளுகையின் கீழ் இருந்தது. அவன் முக்கடலையும் ஆளும் சக்கரவர்த்தியாக விளங்கினான்.
அவனது ஆட்சி காலத்தில் தான் சீனப் பேரரசர் குப்ளாக்கானின் தூதுவனாக மார்க்கோ போலோ பாண்டிய நாட்டுக்கு வருகை தந்தான். பாண்டிய நாட்டைப் பற்றியும், மதுரையின் செல்வச் செழிப்பைப் பற்றியும் வியக்கத்தகு முறையில் ஒரு நேரடி வர்ணனையைப் பதிவு செய்தான் மார்க்கோ போலோ.
குலசேகர பாண்டியனின் காலத்தில் நடந்த இலங்கைப் போர் குறிப்பிடத்தகுந்தது. போரில் வெற்றிபெற்று அங்கு இருந்த புத்தபிரானின் புனிதப்பல்லை மதுரைக்கு எடுத்து வந்தனர். அதன் பின்னர் இலங்கை வேந்தன் பராகிரமபாகு வந்து இறைஞ்சிக் கேட்டு அப்புனிதப்பல்லை பெற்றுச் சென்றான்.
நீண்டகாலம் புகழ்மிகு ஆட்சியை நடத்திய குலசேகர பாண்டியனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்த மனைவியின் மகன் சுந்தரபாண்டியன். இரண்டாம் மனைவியின் மகன் வீரபாண்டியன். அறிவுத்திறனும், ஆற்றலும் ஒருங்கே கொண்டவனாக வீரபாண்டியன் திகழ்கிறான் எனக்கருதி மன்னன் எடுத்த முடிவுகள் சுந்தரபாண்டியனை பெரும் ஆத்திரத்துக்கு உள்ளாக்கியது.
அவன் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத மாபாதகச் செயலைச் செய்யத்துணிந்தான். குடும்பத்துக்குள் உருவான மோதல், ஒரு பெரும் பேரரசையே வரலாற்றில் இருந்தே அப்புறப்படுத்தும் நிலையை ஏற்படுத்தியது. புகழின் உச்சத்தைத் தொட்ட ஒரு தேசத்தின் மீது துயரத்தின் காரிருள் சூழ்ந்தது. அத்தகைய சூழலிலும் துரோகத்தையெல்லாம் மிஞ்சும் வகையில் பிரகாசமாக ஒளிவீசியது ஒரு மாவீரனின் வீரசாகசம்.
பாண்டியர்களின் குலவாள் சந்திரஹாசத்தில் பட்டுத்தெறிக்கும் ஒளியில் இருந்து அந்த மகத்தான வீரக்கதை எழுதப்பட்டது. அந்தக்கதையே “சந்திரஹாசம்”.
Pre-Order before November 15th 2015 and get Chandrahasam Audio-Video App Free.